விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள தாமரைக்குளம் பகுதியில் விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம் ஒன்று கரையோரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், தமிழர்களின் தெய்வமான முருகனுக்கு தமிழ் இலக்கியங்களில் பல்வேறு வாகனங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பிணி முகம் என யானை குறிப்பிடப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக கப்பியாம்புலியூரில் முருகன் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கற்சிலையில் யானை மீது அமர்ந்து முருகன் பவனி வரும் காட்சி அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
இங்கு அமைந்துள்ள முருகன் சிற்பம் பல்லவர் காலத்தை (கி.பி. 7-ம் நூற்றாண்டு) சேர்ந்ததும், சுமார் 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய சிற்பம் ஆகும். வருவாய்த்துறை பாதுகாப்பில் இருந்தால் விழுப்புரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலாம் என்றார்.
ஆய்வின்போது தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், கிராம உதவியாளர் முரளி, ஓய்வுபெற்ற அகில இந்திய வானொலி அதிகாரி சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.