திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இதனால் இன்று கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றிக்காக பக்தர்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் இன்று கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.