தூத்துக்குடி:
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது. இந்த பணி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதை எண்ணுவதற்காக கோவிலில் உள்ள வசந்த மண்டபத்திற்கு காணிக்கைகள் மொத்தமாகக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 76 லட்சத்து 38 ஆயிரத்து 927 ரூபாய் (ரூ. 3,78,38,927) உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும் 1,908 கிராம் தங்க பொருட்களும், 21 ஆயிரத்து 100 கிராம் வெள்ளியும், 26 ஆயிரத்து 100 கிராம் பித்தளையும் உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் எந்த மாதமும் இல்லாத அளவுக்கு, இம்மாதம் வெளிநாட்டு கரன்சிகள் அதிக அளவில் காணிக்கையாக கிடைத்துள்ளது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும், அதே போல் அரபு நாடுகளான சவூதி மற்றும் குவைத் நாடுகளைச் சேர்ந்த கரன்சிகள் உண்டியலில் வருவாயாக கிடைத்துள்ளது.
மொத்தமாக 1,234 வெளிநாட்டு கரன்சிகள் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.