6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சாஹிப்ஜாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான் இருவரும் ஓப்பனிங் செய்தனர். இதில் ஃபர்ஹான் 45 பந்துகளில் அரை சதம் கடந்து (58 ரன்கள்) அசத்தினார். மறுமுனையில் ஆடிய ஃபகார் ஜமான் 15 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய சயீம் அயூப் 21 ரன்கள், ஹுசைன் டலத் 10 ரன்கள், முகமது நவாஸ் 21, சல்மான் அலி அகா 17, ஃபஹீம் அஷ்ரம் 20 ரன்கள் என 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்திருந்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் பார்ட்னர்ஷிப் நூறு ரன்களை கடந்து விளாசினர். அபிஷேக் சர்மா 74 ரன்களும், ஷுப்மன் கில் 47 ரன்களும் எடுத்திருந்த நிலையில், அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

திலக் வர்மா 30 ரன்கள், சஞ்சு சாம்சன் 13 ரன்கள், ஹர்திக் பாண்டியா 7 ரன்கள் எடுத்த நிலையில் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 174 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

கடந்த ஏழு நாட்களில் பாகிஸ்தானை இந்திய அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவூஃப் 2 விக்கெட்டுகளும், அப்ரார் அஹமது, ஃபஹீம் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *