துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் நிசங்கா மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி மற்றும் பாபர் ஹயாத் ஆகியோர் ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் சதமடித்துள்ளனர்.