மதுரை,
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா, சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ‘தமிழகம் தலை நிமிர’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
வருகிற 12-ந்தேதி மதுரையில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருக்கிறார். இதை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார்.
மதுரையை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்திய சென்னை, பெரம்பலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கிறார்.
இந்த நிலையில், மதுரையில் சுற்றுப்பயண தொடக்க விழாவுக்கு அனுமதிகோரி, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜனதா சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி மனு அளித்தார்.
அந்த மனுவில், கோ.புதூர் பஸ் நிலையம், பழங்காநத்தம், சிம்மக்கல், அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு உள்ளிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி தருமாறு கேட்டு இருந்தார்.
இதையடுத்து அண்ணா நகர் அம்பிகா திரையரங்கு சந்திப்பில் பிரசாரம் பயண தொடக்க விழாவை நடத்த மாநகர் போலீசார் அனுமதி அளித்தனர்.
மேலும், பிரசார பயணத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை பா.ஜனதாவுக்கு விதித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.