திருச்சியில் அரசு பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் சீனமொழி !!

திருச்சி,
பொதுவாக டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்களில் வழித்தடம் மற்றும் செல்ல வேண்டிய ஊரின் பெயரை பஸ்சின் முன், பின் பகுதிகளில் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.

தற்போது அனைத்து பஸ்களிலும் டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பலகையில் பஸ் செல்லும் இடம், வழித்தடம் ஆகியவை, இரவு நேரங்களிலும் எளிதாக தெரியும் வகையில் ஒளிரும் தன்மையுடன் இருக்கும்.

பயணிகள் தங்களது ஊருக்கு செல்லும் பஸ்சை எளிதில் அடையாளம் காண்பதற்காக நவீன முறையில் இந்த டிஜிட்டல் பெயர் பலகை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் அரசு பஸ்சின் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு லால்குடி, பெருவளநல்லூர், குமுளூர் வழியாக கொளக்குடி வரை செல்லும் அரசு டவுன் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழியில் ஊர் பெயர் இடம் பெற்றது. இதனை பார்த்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

அதே நேரத்தில் சில சமூக வலைதளவாசிகள் இதனை வீடியோ எடுத்து திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுவதாக கலாய்த்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை வட்டாரத்தில் கேட்டபோது, திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு டவுன் பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழில் பெயர் வருவதற்கு பதிலாக வேறு மொழியில் வருவதாக புகார் வந்தது. இதனை போக்குவரத்து ஊழியரை கொண்டு உடனே சரிசெய்யப்பட்டது.

டிஜிட்டல் பெயர் பலகையில் உள்ள எலக்ட்ரிக்கல் சர்கியூட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது.

இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்களில் இடம் பெற்ற டிஜிட்டல் பெயர் பலகையில் ஆய்வு செய்து, இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *