கண்ணூர்,
கேரளாவின் திரிச்சூர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சுரேஷ் கோபி. மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
கேரள திரையுலகில் தனக்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார். தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பா.ஜ.க. அரசில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான இணை மந்திரியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் கண்ணூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், உண்மையில் நான் நடிப்பை தொடரவே விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னுடைய வருவாய் தற்போது முற்றிலும் நின்று விட்டது என்று கூறினார்.
நான் ஒருபோதும் மந்திரியாக வேண்டும் என்று கேட்கவேயில்லை. தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு கூட, மந்திரியாக எனக்கு விருப்பமில்லை.
என்னுடைய நடிப்பையே தொடர விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினேன் என்றார்.
பா.ஜ.க.வின் மிக இளம் வயது உறுப்பினர் என்று குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை உறுப்பினரான சதானந்தன் மாஸ்டரை அவருக்கு பதிலாக மத்திய மந்திரியாக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.