பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய இரண்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
அவர்கள் வைத்திருந்த உணவு பொருட்கள் தொடர்பான டப்பாக்களில் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 31 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 4 கிலோ சைலோசைபின் காளான் எனப்படும் போதைப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 2 பேரும் தங்களது கூட்டாளி ஒருவர் மற்றொரு விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து மற்றொரு விமானத்தில் வந்த பயணி, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த பயணியிடமும் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்து 14 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 2 கிலோ சைலோசைபின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 3 பேரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.50 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான 3 பேர் மீதும் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.