சென்னை
தமிழ்நாட்டில் கோல்ட் ட்ரிப் என்ற இருமல் மருந்தை தடை செய்வது குறித்து சட்டசபையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர். இதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் அசன்மவுலானா, வேல்முருகன், பாலாஜி ஈஸ்வரன், வானதி சீனிவாசன், அருள், ஆர்.பி. உதயகுமார் பேசினர்.
இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது:-
இரும்பல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி பிற்பகல் மத்தியபிரதேசம் மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு இ- மெயிலில் கடிதம் வரப்பட்டது.
கிடைத்த அரை மணி நேரத்தில் முதுநிலை மருந்து ஆய்வாளர் தலைமையில் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு மேற்கொண்டதில் வீதிமீறல்கள் கண்டறியப்பட்டு 5 மருந்துகள் பகுப்பாய்விற்காக கொண்டு வரப்பட்டது.
அதில் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்ட சர்ச்சைக்குரிய மருந்து குறித்த விவரங்கள் அனைத்து மருந்து ஆய்வாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
3.10.2025 அன்று நிறுவனத்திற்கு உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதிகாரிகளால் நிறுவனம் மூடப்பட்டது. இந்த மருந்துகள் எல்லா ஆய்வாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தில் உற்பத்தி செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடர் நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் நிறுத்த குறிப்பாணை அனுப்பப்பட்டது.
25 நாட்களுக்கு பிறகே மத்திய பிரதேசத்தில் இருந்து நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் அரசு துரிதமாக செயல்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தற்போது மூடப்பட்டு இருக்கிறது.
மருந்து குறித்த எச்சரிக்கையும் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள 7.10.2025 அன்று நோடீஸ் கொடுக்கப்பட்டது.
மொத்த இருப்பும் 8ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பலமுறை தண்டிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த நிறுவனத்திற்கு அதிமுக ஆட்சி காலத்தில் தான் உரிமங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 397 மருந்து நிறுவனங்கள் இருக்கிறது.
அந்த நிறுவனங்களில் இருந்து அந்த நிறுவனங்களில் இருந்து 12 ஆயிரம் கோடியில் இருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உரிமம் இல்லாத நிறுவனத்தை யார் நடத்தினாலும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
2019 முதல் 2023ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இருமல் மருந்து விவகாரத்தில், தகவல் வந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் மீது அக்டோபர் 8ந்தேதி புகாரளிக்கப்பட்டது. அக்டோபர் 9ம் தேதிதான் மத்தியபிரதேச போலீசார் தமிழ்நாட்டுக்கு வந்தனர்.
தமிழ்நாடு போலீஸ் உதவியுடன்தான் ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று வருடத்திற்கு ஒருமுறை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் மத்திய அரசு தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இந்த சோதனைகள் செய்யவில்லை. மருந்து ஏற்றுமதி என்பது உலகில் 20 சதவீதத்தை இந்திய நிறுவனங்கள் செய்வதாக தெரிகிறது.
இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது அதே சமயம் பாதுகாப்பான மருந்தாக அனுப்பப்பட வேண்டும். இதனால் நாங்கள் மத்திய அரசையோ மற்ற மாநிலங்களையோ குறை கூற விரும்பவில்லை.
தமிழகத்தில் மருந்து கட்டுப்பாடு துறைக்கு தேவையான அளவு பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வார்கள். பொதுமக்கள் டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் யாரும் வாங்கி உட்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.