தஞ்சாவூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர்.
இந்த நிலையில் போதிய முன்னேற்பாடு செய்யாதது, லாரிகள் போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் தாமதமாவதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அவ்வப்போது மழை பெய்து மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் அளவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால், தற்போது 17 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்பதை கடந்து 20 முதல் 25 சதவீதம் வரை நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதை கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலும், சாலையிலும் நெல்லை கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனா்.
எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், இதுதொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதமும் அனுப்பியது.
இதையடுத்து, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன. இதில் ஒரு குழுவில் ஒரு துணை இயக்குனர் மற்றும் 2 தொழில்நுட்ப அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய இருந்தனர்.
அதன்படி, தஞ்சையில் இன்று 2-ம் குழு வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராராமுத்திரை கோட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்த ஆய்வு பணிகளை முடித்து பிற்பகலில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய குழுவின் ஆய்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ஆய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆய்வு செய்யும் தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
22 சதவீத ஈரப்பதத்திற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு இந்த ஆய்வு ஒத்திவைப்பு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இருந்தாலும் மீண்டும் மத்திய குழுவினர் உடனடியாக நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.