சென்னை:
சின்னத் திரையில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்று பிரபலமானவர் ஷாலின் ஜோயா. மேலும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியாற்றிய ஷாலின் ஜோயாவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
மலையாளம் கலந்த தமிழில் அவர் பேசுவது, போட்டியாளர்களாக பங்கேற்ற வடிவுக்கரசி, நளினி ஆகியோரிடம் நகைச்சுவை உரையாடல் நிகழ்ச்சியையே கலகலப்பாக்கி வந்தது.
இந்நிலையில் ஷாலின் ஜோயா முதன் முதலாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கிராமத்து பின்னணியில் 90 கால கட்டத்தில் நடக்கும் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தில் அருண், பிரிகிடா, ஜாவா சுந்தரேசன், தேவதர்ஷினி, அருள்தாஸ், அஷ்வின் காக்கு மனு ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆர்.கே.இண்டர் நேஷனல் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இது குறித்து ஷாலின் ஜோயா கூறியதாவது:- 90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடைபெறும் இக்கதையின் படி ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது.
அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் பேண்டசி கலந்து சொல்ல இருக்கிறோம்.
இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. தரமான படைப்புகளை ரசிக்கும் தமிழ் ரசிகப் பெருமக்கள் எங்கள் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஷாலின் ஜோயா ஏற்கனவே மலையாளத்தில் இயக்கிய ‘திபேமிலி ஆக்ட்’ படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.