கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தனது வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிக்கும் அளவுக்கு வரலாறு மாறியிருக்கிறது – சீமான்!!

சென்னை:
கோட்டையில் நான் கொடியேற்றுவதை விஜய் ஒருநாள் பார்க்கத்தான் போகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:


இதர மாநிலங்கள் தாங்கள் உருவான நாளை பெருமையோடு கொண்டாடி கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழகத்தில் மாநிலம் பிறந்த நாளை (நவ.1) தமிழ்நாடு நாள் என்று கொண்டாடாமல், ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.

திராவிடம் என்பதே ஒரு திரிபு, ஒரு ஏமாற்று என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். திட்டமிட்டே தமிழர்களின் அடையாளங்களையும், வரலாற்றையும் மறைக்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் தேர்தலில் மற்ற கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தால் 10 எம்.பி.க்கள், 25 எம்எல்ஏ.க்கள் கிடைப்பார்கள். எங்களுக்கு வேண்டியது அந்த எம்எல்ஏ சீட்டுகள் அல்ல.

தமிழகத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதற்கு ஒரே ஆயுதம் பொறுமை. பொறுத்து நாங்கள் ஆள்வோம்.

தமிழகத்தின் கொடியை ஏற்றினால் பிரிவினை வாதம் (தவெக தலைவர் விஜய்யை சுட்டிக்காட்டி) என்று சொல்கிறார். அவருக்கு என்ன பேசுவது என்று தெரியாததால் பேசுகிறார். கோட்டையில் ஒரு நாள் நான் கொடியேற்றுவதை அவர் பார்க்கத்தான் போகிறார்.

என் கூட்டங்களில் நான் பேசும் கருத்தை உள்வாங்கி கொண்டு தான் என் தொண்டர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ஆனால் அவர் (விஜய்) கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே கத்துவது மட்டும்தான் கேட்கும்.

ஏன் கத்துகிறார்கள் என்று புரியாது. வரலாறு திரும்புகிறது என்றனர். புரட்சிகரமான மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தனது வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிக்கும் அளவுக்கு வரலாறு மாறியிருக்கிறது.

சுயமரியாதை என்று சொல்ல திமுகவில், அதிமுகவில் ஒருவருக்காவது தகுதி இருக்கிறதா? உண்மையான திராவிடத்தின் வாரிசு நாங்கள் தான் என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

உங்களை ஆளை பார்த்தால் அப்படித் தெரியவில்லையே ஐயா. முதலமைச்சர் பதவியை சசிகலா அறிவிக்கும்போது காலில் தவழ்ந்து விழுந்து கும்பிட்டீர்களே, அதுதான் சுயமரியாதையா? இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *