கோவை,
ஜி.எஸ்.டி. குறைப்பால் 2 மாதங்களில் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜி.எஸ்.டி. சீராய்வு மற்றும் வரி குறைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. கோவை பி.எஸ்.ஜி. கன்வென்சன் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந் தராஜுலு வரவேற்று பேசினார். பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயலாளர் ராஜ்குமார், கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் மத்திய அமைச்சரை பாராட்டி பேசினார்கள்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில வர்த்தக சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் பேசும்போது கூறியதாவது:-
வணிகர் பேரமைப்பு சார்பில் கோவையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாராட்டு அனைத்தும் பிரதமர் மோடிக்கு தான் போய் சேர வேண்டும். அவர்தான் ஜி.எஸ்.டி. குறைப்புக்கு வித்திட்டவர். தொடர்ந்து என்னிடம் ஜி.எஸ்.டி சீராய்வு குறித்து கேட்டு வந்தார். இதன்படி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு 5 சதவீதம், 18 சதவீதம் என்று வரி குறைக்கப்பட்டது.
40 சதவீதம் என்பது மிகவும் ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இது தவிர தனி நபர் வருமான வரி விகிதம் ரூ.12 லட்சமாக கொண்டு வரப்பட்டது.
ஜி.எஸ்.டி.யை தீபாவளி பரிசாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி ஜி.எஸ்.டி. குறைப்பு மூலம் மட்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 6 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று உள்ளது.
வழக்கத்தைவிட 72 சதவீதம் வர்த்தகம் உயர்ந்துள்ளது. மருந்து கம்பெனி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது.
கார், சரக்கு வாகனம் பயணிகள் வாகனம் ஆகியவற்றின் வியாபாரமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அக்டோபர் மாதத்தில் மட்டும் 40.5 சதவீதம் அளவுக்கு வாகன விற்பனை உயர்ந்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனையும் 51 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 31 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டர் போன்ற வாகனங்களின் விற்பனையும் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
பொதுவாக மக்களின் வாங்கும் திறன் அதிகரித்தால்தான் விற்பனை அதிகரித்து நுகர்வு திறன் உயர்ந்துதொழில் வளரும். அந்த அளவுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு சிறப்பான மாற்றத்தை தந்துள்ளது. இதை இன்னும் எளிமைப்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பேசும்போது, ஜி.எஸ்.டி. சீராய்வு என்பது வணிகர்கள், பொதுமக்களுக்கு நன்மையாக உள்ளது.
இந்த நிலையில் தற்போதுள்ள இருமுனை வரியை ஒரு முனை வரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க 33 சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., எம்.ராஜூஅப்சரா, என்.ராமச்சந்திர லக்கோட்டி, ஜெயந்திலால் ஜே. ஜெலானி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவை மாவட்ட தலைவர் ஜி.இருதயராஜா நன்றி கூறினார்.