சென்னை:
ராஷ்மிகாவை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’. ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.
கடந்த நவ.07 அன்று வெளியான இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: “கீத கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமா தேவி தான் (‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, தன் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அவர் விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்திருக்கிறார். அவர் இடத்தில் நான் இருந்தால், நான் உடனடியாக எதிர்வினையாற்றி இருப்பேன்.
ஆனால் ராஷ்மிகா ஒவ்வொரு நாளும் கருணையுடன் நடந்து கொள்கிறார். மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை.
ஒரு நாள், உலகம் அவரை உண்மையிலேயே யார் என்று பார்க்கும். அவர் ஒரு அற்புதமான பெண். நான் ‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தைப் பார்த்து, மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.
பாக்ஸ் ஆபிஸ் வசூலை விட, இந்த படம் சிந்தனையையும் விழிப்புணர்வையும் தூண்டியுள்ளது, பெண்கள் துணிந்து பேசுவதற்கு ஊக்கமளித்துள்ளது.
பல வணிக வெற்றிகள் இந்த வகையான சமூக தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன. ராகுலும் தயாரிப்பாளர்களும் குறிப்பிடத்தக்க ஒன்றைச் சாதித்துள்ளனர்’ இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.
ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வருகின்றனர்.
இருவருமே அதுகுறித்து பேசவில்லை என்றாலும், அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது உறுதியானது.