யார் வேண்டுமாலும் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் பணிகள் செய்யலாம்; அது அவர்களின் உரிமை…. ஆனால், மக்கள் அவர்களை ஏற்கிறார்களா என்பது தேர்தலில் தான் தெரியும்!! ரங்கசாமி கருத்து!!

புதுச்சேரி:
புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார்.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார்.

இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது.

ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

அதேசமயம், தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் எம்பி-யையும் சந்தித்துப் பேசி இருக்கிறார் ரங்கசாமி. இந்த நிலையில், வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸின் வியூகம் தான் என்ன என்பது குறித்து ரங்கசாமியிடமே சில கேள்விகளை முன்வைத்தோம்.

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணியில் நீடிப்பீர்களா?

அதை தேர்தல் வரும்போது சொல்கிறேன். தற்போது என்டிஏ கூட்டணியில் இருந்தே பேசுகிறேன். பிஹாரைப் போலவே புதுச்சேரியிலும் 2026 தேர்தல் முடிவுகள் இருக்கும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள்… ஒருவேளை அது கிடைக்காவிட்டால் கூட்டணியை விட்டு விலகி விடுவீர்களா?

மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அது கிடைக்க வேண்டியது அவசியம்.

பாஜக-வுடன் கருத்து வேறுபாடு இருப்பதால் தான் அமைச்சர் ஜான்குமாருக்கு இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறீர்களா?

கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. விரைவில் அவருக்கு இலாகா ஒதுக்குவோம்.

புதுச்சேரியில் புதியவர்கள் கட்சி தொடங்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்களே..?

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அந்த வகையில், புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.

என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து ஜோஸ் சார்லஸ் தரப்பு பணிகளைச் செய்கிறதே..?

யார் வேண்டுமாலும் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் பணிகள் செய்யலாம். அது அவர்களின் உரிமை. ஆனால், மக்கள் அவர்களை ஏற்கிறார்களா என்பது தேர்தலில் தான் தெரியும்.

ஜோஸ் சார்லஸ் தரப்பு தங்களை கடுமையாக விமர்சிக்கிறது… ஆனால் உங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜக-வினர், ஜோஸுடன் தொடர்பில் இருக்கிறார்களே?

ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு சமயம் வரும்போது பதில் சொல்வேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *