சென்னை:
ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பேசிய கருத்து விசிக-திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதாவது, இவர் முன்னதாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு வேண்டும் என பேசினார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடப்பதாக கூறினார்.
இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இதனிடையே கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா நேற்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 2001ஆம் ஆண்டு முதல் திருமாவளவனுடன் சகோதரர் பாசத்துடன் பழகி வருகிறேன். தொலைநோக்கு பார்வை உடையவர் திருமாவளவன், அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என கூறினார்.