ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் கட்சியாக தேமுதிக உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று இரவு ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரேமலதா அங்கு பேசியதாவது:
2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேமுதிக பெறும். ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச் சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். அடுத்ததாக கடலூரில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
அதற்காக அனைவரும் கடலூரை நோக்கி வரவேண்டும். அந்த மாநாட்டின் வெற்றிதான் நமது 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியை அமைப்போம்.
எஸ்ஐஆர் பணிகளின் போது நமது வாக்கு இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்தி விட்டால் நமது வாக்கை யாரும் திருடமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.