நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்- தமிழிசை !!

“அறிவு இருப்பவர்கள் அறிவுத் திருவிழாவை நடத்துகிறோம்” என உதயநிதி ஸ்டாலின் குத்தலாகச் சொன்னதற்கு, “அப்படியானால் அறிவு இருப்பதால் தான் துணை முதல்வர் ஆனீர்களா?” என தடதடத்திருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசினோம்.

திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக என கூறிவந்த நீங்கள், தற்போது அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருப்பது முரண் இல்லையா?

நாங்கள் திராவிடத்துக்கு எதிரானவர்கள் இல்லை. திமுக-வின் கொள்கைக்குத்தான் எதிரானவர்கள். திராவிடம் எனச் சொல்லிக் கொண்டு, கடவுள் மறுப்பு, கலாச்சார மறுப்பு எனக் கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிமுக-வும், திமுக-வும் திராவிடக் கட்சிகளாக இருந்தாலும், கலாச்சாரத்தை பின்பற்று வதிலும், தெய்வங்களை வணங்குவதிலும், அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதிலும் அதிமுக வேறுபட்ட கட்சி. அதேபோல் தேசியத்துக்குள் இருக்கும் திராவிடத்தை பாஜக பேசுகிறது. ஆனால், திமுக, தேசியத்தில் இருந்து திராவிடம் பிரிந்தது போல பேசுகிறது.

திமுக-வுக்கும் எங்களுக்கும் தான் நேரடிப் போட்டி என்று சொல்லி வந்த பாஜக, தற்போது அந்த இடத்தை நழுவவிட்டது போல் தெரிகிறதே..?

திமுக-வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுகிறது. அவர்கள் தனித்து நின்றால், திமுக-வுக்கும் – பாஜக-வுக்கும் இடையே போட்டி எனச் சொல்லலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில், கூட்டணிகளுக்கு இடையே தான் போட்டி நடக்கிறது.

ஆனாலும் நாங்கள் பாஜக அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். திமுக-வுக்கும், தவெக-வுக்கும் தான் போட்டி என்கிறார் விஜய். ஒருவேளை அவர்களுக்குள் போட்டி என்றால், யார் இரண்டாவது இடத்துக்கு வருவது என்பதில் தான் இருக்குமே தவிர, முதலிடத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வரும்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என கருதுகிறீர்கள்?

தமிழகத்தில் மோசமான ஆட்சி நடக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பில்லை. கோயிலுக்குள் புகுந்து கொலை செய்கிறார்கள். இந்து மதத்தை துவேஷமாக, எதிரியாக சித்தரிக்கிறார்கள்.

இவை எதுவும் நடக்கக்கூடாது என்றால், நிச்சயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.

மக்களும் மாற்றம் வேண்டும் என நினைக்கின்றனர். தமிழக மக்களை வேறுபடுத்தி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் அனைத்தையும், திமுக தனது அரசியல் காரணத்துக்காக தடுக்கிறது. எனவே, நிச்சயம் ஆட்சி மாற்றம் வேண்டும்.

75 லட்சம் மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தே பிஹாரில் நிதிஷ் குமார் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாராமே?


பெண்கள் அறுதிப்பெரும்பான்மையுடன் எங்களுக்கு வாக்களிக்கக் காரணம், அங்கு மதுவிலக்கு கொண்டு வந்ததால் தான். தமிழகத்தில் திமுக, டாஸ்மாக் கடைகளைக் குறைப்போம் என்றதே, குறைத்தார்களா? ஆனால் பிஹாரில், ‘குடி’ இல்லா சமுதாயத்தை கொடுத்தார்கள்.

அதற்கு பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றும்கூட பிஹாரிகள் குடித்துவிட்டு வீட்டிலேயே படுத்துக் கிடக்காமல், வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று கடுமையாக உழைக்கிறார்கள். எனவே, ரூ.10 ஆயிரம் கொடுத்து வாக்கை களவாடிவிட்டார்கள் என அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

3 அணி ஆளும் கூட்டணிக்கு எதிராக நின்றால் அது அந்த கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடாதா?

1967-ல் திமுக-வின் கடுமையான எதிர்ப்பாளராக ராஜாஜி இருந்தார். ஆனால், காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையுடன் திமுக-வுடன் ராஜாஜி கூட்டணியை ஏற்படுத்தினார்.

ராஜாஜி போன்றவர்களே அவ்வாறு செய்யும்போது, விஜய் போன்றவர்கள் தவெக – திமுக இடையே தான் போட்டி என வசனம் பேசிக்கொண்டிருக்காமல், திமுக-வை தோற்கடிக்கும் வியூகத்துடன் இணைய வேண்டும்.


கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றுவிடுவேன் என்று சொல்ல இது ஒன்றும் சினிமா அல்ல. திமுக-வை தூக்கி வீச வேண்டும் என்றால், ஓபிஎஸ், தினகரன், விஜய் என அனைவருமே அதற்கான வியூக அமைப்பில் ஒன்றுசேர வேண்டும்.

திமுக-வை வீழ்த்துவதை விட பழனிசாமி மீண்டும் முதல்வராகி விடக்கூடாது என்பதில் தினகரன் விடாப்பிடியாக நிற்கிறாரே?

அப்படினால், டிடிவி தினகரன் காலங்காலமாக பின்பற்றிய ஜெயலலிதாவின் கொள்கை என்ன ஆனது? பழனிசாமியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, தீவிர எதிரியான திமுக-விடம் செல்வாரா? பழனிசாமியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா வளர்த்த கட்சியை அல்லவா அவர்கள் காவு கொடுக்கிறார்கள். உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, உதிரியாக இருக்கக் கூடாது.

திமுக ஆட்சியில் பெண்களுக்காக நிறையத் திட்டங்களைத் தந்திருக்கிறார்களே..?

திட்டங்களை கொடுத்து என்ன பயன்? நம் வீட்டு பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியவில்லையே… திமுக கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை, திருப்பி எடுத்துக் கொண்டு போய், மாலையில், டாஸ்மாக்கில் கணவன்மார்கள் குடிக்கிறார்கள்.

இதுபோன்ற ஒரு ஆட்சியை கொண்டு வரப் போகிறோமா அல்லது டாஸ்மாக் இல்லாத சமுதாயத்தை படைக்கும் ஆட்சியை கொண்டு வரப் போகிறோமா என்பதை தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். பிஹாரைப் போல பெண்கள் அனைவரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்தமுடிவு, திமுவு-க்கு முடிவுரை எழுத வேண்டும்.

அறிவு இருப்பதால் அறிவுத் திருவிழாவை நடத்துவதாக உதயநிதி பேசியிருக்கிறாரே..?

இவர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறது, மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்பது போல் அல்லவா அவர் பேசுகிறார். அறிவாலயம் என வைத்துக் கொண்டால், உங்கள் எல்லோருக்கும் அறிவு இருக்கிறது என்று அர்த்தமா? உதயநிதியின் பேச்சில் ஆணவம் தெரிகிறது.

அறிவாற்றல் மூலம் தான், துணை முதல்வர் பதவியை உதயநிதி பெற்றாரா? அறிவாலய அடிமையாக இருந்ததாலும், அறிவாலய வாரிசாக இருந்ததாலும் தானே அவர் பதவியைப் பெற்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *