நெல்லை மாநகராட்சி மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக கவுன்சிலர்களே இருந்து வரும் நிலையில், மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடித்து கடந்த ஜூலை 8ம் தேதி சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். பின்னர் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று ( ஆகஸ்ட் 5) நடைபெறுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் , நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் அவர் ஒருமனதாக தேய்ர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை சைக்கிளில் வந்த ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக 25வது வார்டு உறுப்பினராக உள்ள கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.