தாழம்பூர்:
ரூ.25 கோடி மதிப்பில் கட்டப் பட்ட உலகத் தரத்திலான வேல்ஸ் கால்பந்து அகாடமி மற்றும் விடுதியை, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் உள்ள வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்கள், சுமார் ரூ.25 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள வேல்ஸ் ஃபுட்பால் ரெசிடென்ஷியல் அகாடமி மற்றும் வேல்ஸ் ஸ்விம்மிங் பள்ளி ஆகியவற்றை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா நேற்று திறந்து வைத்தார்.
இங்கு கால்பந்து மைதானம், முழுமையான குடியிருப்பு வசதிகள், நீச்சல் மற்றும் டைவிங் குளங்கள் ஆகியவை அமைந்துள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆசிய கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கார்த்திகா, அபிநாஷ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும் கேரம் போட்டியில் உலக அரங்கில் சாதித்த கசிமா என்ற மாணவிக்கு ரூ.10 லட்சமும் வழங்கி பாராட்டினார்.
ஐசரி கே. கணேஷ் கூறுகையில், “கிராமங்களில் கால்பந்து மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை, கண்டெடுத்து இந்த கிளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம்.
இவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்க ஸ்பெயின் கால்பந்து வீரர் கெய்ஸ்கா டோகேரோவை, வேல்ஸ் கால்பந்து கிளப்பின் சர்வதேச தூதராக நியமித்துள்ளோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.