மலையாக அருள்பாலிக்கும் அண்ணாமலையார் திருக்கோவில்!!

திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 233-வது தலமாகவும், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகவும் இக்கோவில் உள்ளது.

ஒருமுறை படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றி, எனது அடி அல்லது முடியை எவர் கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார்.

இதையடுத்து, விஷ்ணு பகவான் வராக (பன்றி) அவதாரமெடுத்து சிவனின் பாதங்களைக்காண பூமிக்குள் சென்றார்.

ஆனால் அவரால் காணமுடியவில்லை. அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து, சிவபெருமானின் திருமுடியை கண்டு வர மேலே கிளம்பினார். அவராலும் திருமுடியைக் காண முடியவில்லை.

அப்பொழுது சிவபெருமான் தலையில் இருந்த தாழம்பூவானது கீழே விழுந்தது. அன்னப்பறவையாக மேலே சென்ற பிரம்மா தாழம்பூவிடம், ”நான் சிவபெருமானின் முடியை கண்டதாக கூறுவேன்.

நீ சாட்சியாக இரு” என்று கூறவே, தாழம்பூவும் சரி என்று ஒப்புக்கொண்டது. சொன்னது போல பிரம்மாவும் சிவபெருமானிடம் தான் முடியைக்கண்டதாக கூறவே, தாழம்பூவும், பிரம்மாவுக்கு சாட்சியாக இருந்தது.

பொய் கூறிய பிரம்மனுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது என்றும், தாழம்பூவை இனி தனது சிரசில் சூடமாட்டேன் என்று சிவபெருமான் இருவருக்கும் சாபமிட்டார். ஆகையால்தான் தாழம்பூவானது சிவபெருமானுக்கு அணிவதில்லை. சிவபெருமான் ஜோதி வடிவாக பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சிக்கொடுத்த இடம் திருவண்ணாமலை என்று கூறப்படுகிறது.

ஜோதி வடிவாக காட்சி அளித்த சிவபெருமானே மலையாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அந்த மலை தான் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.

சிறந்த சிவ பக்தரான பிருங்கி முனிவர், பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அதன்படி பார்வதி தேவி, இத்தலத்தில் மீண்டும் சிவபெருமானுடன் இணைய வேண்டி தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், தனது இடது பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சிவமும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை பிருங்கி முனிவர் உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது.

கோவில் அமைப்பு

இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு மொத்தம் 9 பெரிய கோபுரங்களும், 140-க்கும் மேற்பட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. அதில் 22 விநாயகர் சன்னிதிகளும் அடங்கும்.

சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன. இங்கு திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.

கோவிலின் கிழக்கு பகுதியில் 217 அடி உயரத்தில் ராஜகோபுரம் காணப்படுகிறது. மேற்கு பகுதியில் உள்ள கோபுரம் ‘பேய்க் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘மேலக் கோபுரம்’ என்பது ‘மேக்கோபுரம்’ என்றாகி, பின் நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது. தெற்குக் கோபுரம் ‘திருமஞ்சன கோபுரம்’ என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

வடக்குக் கோபுரம் ‘அம்மணி அம்மன் கோபுரம்’ என்றழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள் என்ற பக்தை பல தடங்கல்களுக்கு மத்தியில் ஒவ்வொரு வீடாக சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். இதன் காரணமாகவே இவ்வம்மையார் பெயரில், அம்மணி அம்மன் கோபுரம் விளங்குகிறது.

பொதுவாக ஆலயங்களில் அம்பாள் சன்னிதி முன்பாக சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி உள்ளது.

ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்துவிட்டார். இதை பிரதிபலிக்கும் விதமாக உண்ணாமுலை அம்மன் சன்னிதி முன்பு நந்தி உள்ளது.

இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகுசாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத்தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேளையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என கிட்டத்தட்ட 360 தீர்த்தங்கள் உள்ளன. பிரம்ம தீர்த்த கரையில் கால பைரவர் சன்னிதி உள்ளது. இவரது சிலையானது திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத்துக்கு காணப்படுகிறது.

இவர் எட்டு திருக்கரங்களுடன் ஆயுதம் ஏந்தியும், கபால மாலையுடனும் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுகிறது. எனவே இங்கு கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானது. கிரிவல பாதையின் தூரம் 14 கி.மீ. ஆகும். கிரிவல பாதையில் சன்னிதிகளும், மகான்களின் சமாதிகளும் காணப்படுகின்றன.

மேலும், திருவண்ணாமலை மலையை சுற்றி இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன.

கார்த்திகை திருவிழா

திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா வருகிற 21-11-2025 முதல் 7-12-2025 வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 21-ந் தேதி முதல் நாள் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விழா தொடங்குகிறது.

22-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 23-ந் தேதி விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.

24-ந் தேதி கோவில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினம், சம்பந்த விநாயகர் சன்னிதியில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இறைவன் வெள்ளி வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் பவனி வருவார்.

25-ந் தேதி தங்க சூரியபிரபையிலும், வெள்ளி இந்திர விமானத்திலும் உலா வருகிறார். 26-ந் தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 28-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 29-ந் தேதி வெள்ளி ரதத்திலும் பவனி வரும் காட்சி நடைபெறும். 30-ந் தேதி கோவிலில் மகா ரத உற்சவம் நடைபெறுகிறது.

டிசம்பர் 1-ந் தேதி பிச்சாண்டவர் உற்சவமும், குதிரை வாகனத்தில் பவனியும் நடக்கிறது. 2-ந் தேதி கயிலாச வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும் உலா வருகிறார்.

3-ந் தேதி அதிகாலையில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, பின்பு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து அம்மன், விநாயகர், முருகன் போன்ற பிற சன்னிதிகளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.


4-ந் தேதி சந்திரசேகர் தெப்ப உற்சவமும், 5-ந் தேதி பராசக்தி தெப்ப உற்சவமும், 6-ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இறுதி நாளான 7-ந் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவார்.

தினசரி பூஜை

காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜை, 6 மணிக்கு உஷாகால பூஜை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, 11 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்து, பகல் 12.30 மணிக்கு நடைசாற்றப்படுகிறது.

கோவில் மீண்டும் மாலை 3.30 மணிக்கு திறக்கப்படும். 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை, 9.15 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்து இரவு 9.30 மணிக்கு நடைசாற்றப்படுகிறது

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *