சென்னை:
என் படத்தை சனி, ஞாயிறு விடுமுறையில் போய் பார்த்தால் போதுமானது என்று மாணவர்களுக்கு நடிகர் கவின் அட்வைஸ் செய்துள்ளார்.
The Show Must Go On மற்றும் Black Madras Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாஸ்க்’. இப்படம் வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.
விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி அண்மையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் நடிகர் கவின் பேசும்போது, “என்னுடைய ‘மாஸ்க்’ திரைப்படம் நாளை (நவ.21) வெளியாகிறது. நாளை அனைவருக்கும் கல்லூரி இருக்கும்.
அனைவரும் கல்லூரிக்கு சென்று அன்றைய கடமைகளை முடிக்க வேண்டும். அதன் பிறகு சனி, ஞாயிறு விடுமுறை தினத்தன்று போய் படத்தை பார்த்தால் போதுமானது. ஒன்றும் பிரச்சினை இல்லை. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே” என்று அட்வைஸ் செய்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘மாஸ்க்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.