கடந்த சில நாட்களாகவே சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த 2 வார்த்தைகள் அடிக்கடி உலாவி கொண்டிருக்கின்றன.
யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தை பற்றிய கருத்துகள், டிரைலர் காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. தியேட்டர்களுக்கு சென்று பார்த்த பலரும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளத்தில் வெளியானாலும், தமிழகத்தில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு சில காரணங்களை சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் குணாகுகையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதியை அதில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
மேலும் 1991-ம் ஆண்டும் வெளியான ‘குணா’ தமிழ் திரைப்படத்தை மையப்படுத்தியும் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடல் தான் திரைப்படத்தின் உயிரோட்டமாக அமைந்துள்ளது. இதனாலேயே தமிழகத்தில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்ததாக படத்தின் கதைக்கரு. அதுவும் 2006-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுத்துள்ளனர். கேரள மாநிலம் மஞ்சுமெல் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது அவர்கள் குணாகுகையை பார்வையிட செல்கின்றனர். தடையை மீறி ஆபத்தான குணாகுகைக்குள் நுழைகின்றனர்.
அப்போது அவர்களில் ஒருவர் ஆழமான குழிக்குள் தவறி விழுந்துவிடுகிறார். அவரை நண்பர்கள் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே படத்தின் கதை. ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப கதைக்களம் இருந்தது. இதுவும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் தற்போது கொடைக்கானலுக்கு, குறிப்பாக குணாகுகையை பார்வையிட படையெடுத்து வருகின்றனர். அவர்கள் குணாகுகை பகுதியை பார்வையிட்டு, செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து உற்சாகம் அடைகின்றனர். நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய கேரள குழுவினர் நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். தனியார் யூடியூப் சேனல் மூலம் நடைபெற்ற சிறப்பு படப்பிடிப்பிற்காக அவர்கள் வந்திருந்தனர்.
குறிப்பாக குணாகுகைக்குள் சென்று ஆபத்தான குழிக்குள் விழுந்த சுபாஷ் சந்திரன், குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றிய குட்டன் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது அவர்கள் குணாகுகை பகுதிக்கு நேரில் சென்று, 2006-ம் ஆண்டு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், நிஜ ‘மஞ்சுமல் பாய்ஸ்’ நண்பர்கள் குழுவினரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
மேலும் அங்கு வருகை தந்த தமிழ் திரைப்பட நடிகரான முனிஸ்காந்த், நிஜ ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், “மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது. திரைப்படத்தை பார்த்தபோது உங்களது உண்மையான கஷ்டத்தை நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து நண்பர்கள் குழுவினர், குணாகுகையில் நடந்த சம்பவம் குறித்த தங்களது அனுபவங்களை சுற்றுலா பயணிகளிடம் பகிர்ந்தனர். அப்போது சுற்றுலா பயணிகளின் கண்கள் கண்ணீர் குளமாகியது.
சுபாஷ் சந்திரன் – குட்டன்
இதற்கிடையே குணாகுகை குழிக்குள் தவறி விழுந்து, காப்பாற்றப்பட்ட சுபாஷ் சந்திரன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி எங்களது மஞ்சுமெல் கிராமத்தில் இருந்து நானும், எனது நண்பர்களும் வேனில் புறப்பட்டோம். மறுநாள் காலை கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டோம். மதியம் 2 மணி அளவில் குணாகுகையை சுற்றி பார்த்தோம். அப்போது ஆபத்தான குழிக்குள் நான் தவறி விழுந்து விட்டேன்.
சுமார் 90 அடி ஆழத்தில் நான் விழுந்தேன். அந்த குழிக்குள் கூர்மையான பாறைகள் இருந்தன. அவற்றின் மீது மாறி, மாறி விழுந்தேன். கடைசியாக ஒரு பாறையில் விழுந்தேன். உடம்பெல்லாம் காயங்கள். குழிக்குள் கும்மிருட்டாக இருந்தது. இதனால் நான் பயத்தில் கதறினேன்.
அதனை கேட்ட எனது நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உதவினர். அவர்கள் கொடுத்த கயிறு மூலம் எனது நண்பர் குட்டன் தைரியமாக குழிக்குள் இறங்கி என்னை உயிரோடு காப்பாற்றினார். சுமார் 4 மணி நேரம் குகைக்குள் போராடிக்கொண்டிருந்தேன். குழியில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் என் உயிரே வந்தது.
குணா குகையை மீண்டும் பார்த்தபோது எனது கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. அப்போது எனது நண்பர்கள் என்னை ஆசுவாசப்படுத்தினர். 2006-ம் ஆண்டு வந்த அதே 10 நண்பர்களுடன் நான் மீண்டும் கொடைக்கானலுக்கு வந்துள்ளேன். சுற்றுலா பயணிகள் தயவு செய்து ஆபத்தை உணராமல் எங்கும் செல்லக்கூடாது. இது எனது அறிவுரை.
இவ்வாறு அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.