சென்னை:
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
மீண்டும் வெளியாகும் படங்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணாவுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படமான அண்ணாமலை விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, டிசம்பர் 12-ந்தேதி முதல் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.
அதிரடியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஒரு சாதாரண பால் வியாபாரியான அண்ணாமலையாக நடிக்கிறார், அவர் தனது பணக்கார நண்பர் அசோக்கால் (சரத் பாபு) ஏமாற்றப்படுகிறார்.
அண்ணாமலையின் வீடு இடிக்கப்பட்டு, அவரது குடும்பம் (கால்நடைகள் உட்பட) வெளியேற்றப்படும்போது பழிவாங்க சபதம் செய்கிறார்.
இதன் விளைவாக, அசோக்கை எதிர்த்து அண்ணாமலையின் போராட்டம் தொடங்குகிறது.
அண்ணாமலையின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இருவர் கூட்டணியில் வீரா (1994), பாஷா (1995), மற்றும் பாபா (2002) ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.