புதுடெல்லி:
இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் கூட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது:
நாட்டை கட்டமைப்பதற்கு வரி வருவாய் மிகவும் முக்கியமானது. இதைக்கொண்டுதான், கல்வி, சுகாதாரம், சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே வலுவான இந்தியாவை உருவாக்குவதில் உங்களின் பங்கு முக்கியமானது. ஆனால், வரி வசூலின்போது மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். வரி செலுத்துவோருக்கு ஏற்படும் அசவுகரியங்களை நீங்கள் குறைக்க வேண்டும்.
சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் கூறியபடி, மலரிலிருந்து தேனை எடுக்கும் தேனீக்களைப் போல வருவாய் துறை அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபட வேண்டும்.
இந்திய வரிவிதிப்பு முறையில் மைல்கல் நடவடிக்கையாக நடப்பாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி-யில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இது, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்கு திட்டத்தை பலப்படுத்தி உள்ளது.
வரி விதிப்பு என்பது ஒரு தடையாக இல்லாமல் நம்பிக்கை மற்றும் நியாயத்தின் பாலமாக செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
வரி விதிப்பு முறையில் வெளிப்படையான, பொறுப்புணர்வுமிக்க, நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும்.
இளம் அதிகாரிகளான நீங்கள் புதுமையானவர்களாகவும், பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
உலகளாவிய வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு முர்மு பேசினார்.