தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று சொல்லும் ஆளுநரின் திமிரை அடக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பேச்சு!!

ஈரோடு:
‘தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.

அவருடைய திமிரை அடக்கவேண்டும்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், “ நாம் தினந்தோறும் தொடர் திட்டங்களைத் செயல்படுத்துவதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன சொல்வது என்று தெரியாமல், விரக்தியில் பிரம்மைப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசும் போது, “சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட – ‘பால்வளத் தந்தை’ சி.கு.பரமசிவம் அவர்களின் திருவுருவச் சிலை ஈரோடு பால்பண்ணையில் நிறுவப்படும்” என்று அறிவித்தேன்.

விவசாயக் குடும்பங்களின் வருவாயை உயர்த்த, பால் விநியோக முறையை நவீனப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அவர். தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், கூட்டுறவு பால் சங்கங்கள், பால் செயலாக்கக் கட்டமைப்புகள் அனைத்துமே அவர் விதைத்த விதையின் விளைச்சல். அத்தகைய பெரும் ஆளுமைக்கு நன்றி செலுத்த சொன்னபடியே, சித்தோடு பால்பண்ணை வளாகத்தில் அவருடைய திருவுருவச் சிலையை நிறுவி இருக்கிறோம்.

தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கின்றாரா? அப்படி என்று நான் கேட்க விரும்பவில்லை! அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான்! பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

“நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்” என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்.

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிராகரித்துவிட்டார்கள். பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் பிரதமர் மோடி அவர்களே என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி, மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே?

தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்… நீங்கள் சொன்னால் போதும்…. தமிழ்நாடு அரசு சார்பில், நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன். பழனிசாமி, இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் துரோகம்.

சென்னையை போல, கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில் தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நிராகரித்திருக்கிறது. 2011 மக்கள்தொகையை கணக்கில் வைத்து, நிராகரித்திருக்கிறார்கள். இப்போது 2025-ஆம் ஆண்டு! சென்சஸ் எடுத்தால் 20 இலட்சத்திற்கு அதிகமாக இருக்கும்.

இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும்போது 2035-ஆம் ஆண்டு ஆகி இருக்கும். வட மாநிலத்தில், 20 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து இயக்குகிறார்கள்.

தமிழ்நாடு என்றால் மட்டும் கம்பி கட்டுகின்ற கதையெல்லாம் சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பா.ஜ.க.

‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்’ என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ.க. பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை பாஜக ஆளுநரை நியமித்திருக்கிறார்கள்.

அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது.

தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்? ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்? பா.ஜ.க. ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது?

தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.

இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது.

எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்!

இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்! அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்!

சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், மூன்று மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்… குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசுத் தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

“கலைஞர்” பேர் வைக்கக் கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்! ஆனால், ஒன்று, ஆளுநர் ரவி அவர்களே, நீங்கள் இப்படிதான் தொடர்ந்து பேசவேண்டும். உங்களுடைய தமிழ் வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்! நீங்கள் பேச பேசத்தான் எங்களுடைய வேலையும் ஈசியாகும்!

நேற்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சோஷியல் மீடியாவில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்! 2024-25-ஆம் ஆண்டில், புதிய வழித்தடத்துக்கு ரயில்வே துறையால், 31 ஆயிரத்து 458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடிதான் ஒதுக்கியிருந்தார்கள். அதாவது, ஒரே ஒரு பர்செண்ட்! ஒவ்வொரு முறையும் நம்முடைய பிரதமரை நான் சந்திக்கும்போதும், மறக்காமல் நான் வைக்கின்ற முக்கியமான கோரிக்கை – தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்ற புதிய ரயில் திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுதான்.

ஆனால், அதற்கு அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கை என்ன? இந்த, ‘ஒன் பர்செண்ட்’ நிதி ஒதுக்கீடுதான்! இதற்கு என்ன அர்த்தம்? “வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கீட்டில் பட்டை நாமத்தை போடுகிறது பாஜக-வின் ஆட்சி!”. இதிலிருந்து பா.ஜ.க. நமக்கு சொல்லாமல் சொல்லுகின்ற மெசேஜ்! அரசியல் லாபங்களுக்காக பொதுமக்களை பழிவாங்கும் இந்த அற்ப அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு தொடர் தோல்வியை அளித்துக் கொண்டிருக்கிறது.

முதுகெலும்பை இழந்து கர்சீப்பால் முகத்தை மூடிவிட்டு சுத்துகின்ற பழனிசாமி அவர்களின் துரோக அரசியல்தான் அவருக்கு, ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்ற பட்டப்பேரை பெற்றுத் தந்திருக்கிறது. மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் எங்களுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகிறது.

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம். அதுவும், ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்கின்ற தொல்லைகள், செயற்கை பேரிடர்கள் அதையும் மீறியும் நிறைவேற்றுகிறோம். ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குறோம். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் அடுத்த மாதத்தில் இருந்து வழங்க இருக்கிறோம்.

அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். இந்த சாதனைச் சரித்திரம் தொடரத்தான் போகிறது. உங்களின் அனைத்து கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் நான் நிச்சயம் செய்து கொடுப்பேன்! உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம்! மக்களுக்கும் கழக அரசுக்குமான பாசப்பிணைப்பைப் பார்த்து, அதைக் கெடுக்க சதி செய்கிறார்கள்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் மக்களின் வாக்குரிமையையே பறிக்கலாமா என்று பார்க்கிறார்கள். நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்போது அதுதான் இருப்பதிலேயே மிக மிக முக்கியமானது! ஏனென்றால், திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று! கழக ஆட்சிதான் மீண்டும் அமையும்! தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தங்கு தடையின்றி இரு மடங்கு வேகத்துடன் தொடரும்! அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *