செங்கல்பட்டு:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று, செங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, ‘வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பல இடங்களில் ஒத்துழைப்பு தரவில்லை.

வாக்காளர் திருத்த காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படிவங்கள் பல இடங்களில் சரிவர விநியோகிக்கப்படாமல் உள்ளது.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பக்கத்து தெருவுக்கு குடி பெயர்ந்து சென்றாலும், அதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கண்டுபிடித்து படிவங்கள் வழங்காமல் இடமாற்றம் என தெரிவித்து படிவங்களை திருப்பி அனுப்புகின்றனர்.
வாக்காளர் பட்டியல் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணியை கடைநிலை ஊழியர்களான கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றவர்கள் மேற்கொள்கின்றனர்.
அவர்களுக்கு இணையம் தொடர்பான தகவல் தொழில்நுட்பத்தில் பதிவேற்றுவதில் சிக்கல்கள் அதிகரித்துள்ளன’ என்று குற்றம் சாட்டினர்.
மேலும், ‘தாம்பரத்தில் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதால் அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு மாநிலத்தில் மட்டுமே வாக்குரிமை உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்’ எனவும் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய ஆட்சியர் சினேகா, “வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அதிகப்படியான மன அழுத்தத்தில் உள்ளனர்.
10 முதல் 18 மணி நேரம் வரை அவர்கள் பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சில இடங்களில் இவ்வாறு நடைபெறுகிறது.
இந்தப் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்’ என தெரிவித்தார். ஆட்சியரின் கருத்தால், ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.