மதுரை:
சர்வதேச ஹாக்கி போட்டி மைதானத்துக்கு பார்வையாளர்கள் செல்லும் வழியிலுள்ள ஆறாவது வாயில் (கேட்) கான்கிரீட் கால்வாய் தளம் உடைந்ததால், பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பார்வையாளர்கள், வாகனங்கள் செல்லவும் தடை ஏற்பட்டதால், உடனடியாக மண்ணை கொட்டி சமன்படுத்தும் பணி நடந்தது.
மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் இன்று முதல் (நவ.28) டிச.10-ம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.
வலைதளத்தில் பதிவு செய்த 1,500 பேர் பார்வையிடும் வகையில், தற்காலிக பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்யாத 2,000 பேர் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, மைதான வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு 6-வது வாயில் அமைக்கப்பட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் சிமென்ட் தளமும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் சாலையிலிருந்து மைதானத் துக்குள் செல்லும் மழைநீர் கால்வாய் கான்கிரீட் தளம் சேத மடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் இதன் வழியே பார்வையாளர்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் தடை ஏற்பட்டுள்ளது.
போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், உடனடியாக மணல், கற்களை கொட்டி சமன் படுத்தும் வேலையில் பணி யாளர்கள் ஈடுபட்டனர்.