ராஞ்சி:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தனர்.
சச்சின் சாதனை காலி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சீனியர் நட்சத்திரமான விராட் கோலி சதம் விளாசினார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர், விளாசிய 6-வது சதம் இதுவாகும்.
இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
சிக்ஸர் மன்னன் ரோஹித்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அவர், இதுவரை 352 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி விளாசிய 351 சிக்ஸர்களே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
அதிக போட்டிகளில் விளையாடிய ஜோடி: நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா – விராட் கோலி ஆகியோர் இணைந்து இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் (392) பங்கேற்றவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் – ராகுல் திராவிட் ஆகியோர் கூட்டாக 391 போட்டிகளில் விளையாடி இருந்தார்கள்.