ஐ.பி.எல். 2025 – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்!!

பெங்களூரு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் அமர்க்களமான தொடக்கம் கண்டுள்ளது.

அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை துவம்சம் செய்தது. அடுத்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெளியூரில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்து ‘கெத்து’ காட்டியிருக்கும் பெங்களூரு அணி சொந்த ஊரில் களம் காணும் முதல் ஆட்டத்திலும் தனது உத்வேகத்தை தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை தன்வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதாரும், பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார், யாஷ் தயாள், குருணல் பாண்ட்யாவும் வலுசேர்க்கிறார்கள்.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பையை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் 196 ரன்கள் எடுத்த குஜராத் அணி 160 ரன்னில் மும்பையை முடக்கியது.

2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜோஸ்பட்லர், ரூதர்போர்டு ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இரு ஆட்டங்களிலும் அரைசதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார். பந்து வீச்சில் முகமது சிராஜ், கசிசோ ரபடா, ரஷித் கான், சாய் கிஷோர் மிரட்டக்கூடியவர்கள்.

சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவானது என்பதால் ரன் வேட்டையை எதிர்பார்க்கலாம். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பெங்களூரு தொடக்க ஜோடியின் ஆதிக்கத்தை தடுப்பதை பொறுத்தே குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள்.


குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் திவேதியா, ரஷித் கான், ரபடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.


இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *