சென்னை:
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று மதுரையில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள எகிப்து – நமீபியா அணிகள் மோதின. இதில் நமீபியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பில் புரூஸ் லியாம் (26-வது நிமிடம்), ஜேம்ஸ் டி ஜாகர் (26-வது நிமிடம்), ஜோஷ் வான் டென் மெர்வி (32-வது நிமிடம்), பால் பிரிட்ஸ் ஜான் (60-வது நிமிடம்), ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
நமீபியாவுக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் எகிப்து அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது.
ஸ்பெயின் அணி தரப்பில் ஜூவான் பிரடோ (20-வது நிமிடம்), புரூனோ அவிலா (32-வது நிமிடம்) ஆயோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்பெயின் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
‘இ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 13-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
டிரேசி காடன் 4 கோல்களும், ஹென்றி மார்க்ஹாம் 3 கோல்களும், ஜார்ஜ் பிளெட்சர் 2 கோல்களும் அடித்து அசத்தினர்.
மேக்ஸ் ஆண்டர்சன், மைக்கேல் ராய்டென், ஆலி பென்னட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
‘இ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து 6-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் 3-2 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது.
ஜப்பான் அணி தரப்பில் ஷன் ஹரா (19-வது நிமிடம்), ஷு ஓனோ (20-வது நிமிடம்), கஸுகி டெராசாகா (50-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜப்பான் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. இதே பிரிவில் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா – நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
அர்ஜெண்டினா அணி சார்பில் புரூனோ காரியா 2 கோல்களும் (11 மற்றும் 40-வது நிமிடங்கள்), மேட்டியோ டாரிகியானி ஒரு கோல் அடித்தனர்.
நியூஸிலாந்து அணி தரப்பில் ஜான்டி எல்ம்ஸ் ஹாட்ரிக் கோல் (4, 32 மற்றும் 39-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ‘எஃப்’ பிரிவில் கொரியா – வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.