போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்….. அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!! திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

சென்னை:
போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார்.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வைகோவின் நெஞ்சுரம், வேகத்தை பார்க்கும்போது அவருக்கு 82 வயதா? 28 வயதா? என எண்ணத் தோன்றுகிறது.

அவர் காலடி படாத இடமே இல்லை எனும் அளவுக்கு மக்கள் பிரச்சினைக்காக நடைபயணம் சென்றவர்.

கலைஞருக்கு அருகே இருந்து அரசியல் கற்றவர் வைகோ. போதை ஒழிப்பு, சாதி மத மோதல் தடுப்பு என்ற கருத்துக்களோடு நடைபெறும் இந்த சமத்துவ பயணம் நிச்சயம் வெற்றி பெறும்.

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருளை ஒழிக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு பலன் கிடைத்துள்ளது. போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்பை அறிந்து கொண்டு அதனை கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களை திருத்த வேண்டும். ஏராளமான போதை வஸ்துகள் நாட்டுக்குள் வருகின்றன.

இந்த நுழைவு வாயில்களை அடைத்தாக வேண்டும். நாட்டோட எல்லைக்குள் போதைப்பொருள் வருவதையும், மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும் ஒன்றிய அரசு கண்காணித்து தடுக்க வேண்டும். எல்லா மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. கலைத் துறையை சேர்ந்தோர் பொறுப்புணர்வோடு படைப்புகளை தரவேண்டும், அதன் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது.

பெற்றோர்கள், குழந்தைகளின் மீது பாசத்தை காண்பிக்க வேண்டும். அதை மறுக்க முடியாது. ஆனால் அதற்காக அவர்கள் பாதை மாறிச் செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

பெற்றோர்கள், குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக அம்மா, அப்பா, அக்கா, தங்கை ஆகியோர் வீட்டில் உள்ள குழந்தைகள் வழி மாறிப் போகாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேச வேண்டும். மனம் விட்டு பேசினாலே பாதி பாரம் குறைந்து விடும். தவறான பாதைக்கு செல்லக்கூடிய தேவை நிச்சயம் இருக்காது.

அதேபோல ஆசிரியர்கள், சமூக பிரபலங்கள் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து பரப்ப வேண்டும். சாதி, மத பிரச்சினைகள் தற்போது பரவலாக காணப்படுகின்றன. ஒன்றிய அமைச்சர்கள் உட்பட பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் வெறுப்பு பேச்சுக்களை பேசிவருகின்றனர். இது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் விதமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயந்து வாழக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் சமயத்தில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு தாக்குதலை பற்றி அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை நமது நாட்டில் இருந்ததா?

ஊரே ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் சென்று, இப்பொது ஒருவருக்கு ஒருவர் எதிரியாக கட்டமைக்கும் வேலையை சில மதவாதசக்திகள் செய்து வருகின்றன.

அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மிகத்தை, சில கும்பல் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். வைகோவின் சமத்துவ பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *