நான் எதிர்ப்பவர்களே எனக்கு எதிரி; அந்தவகையில் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகள் தான் எனக்கு எதிரி – சீமான் தத்துவம்!!

சென்னை;
நான் எதிர்ப்பவர்களே எனக்கு எதிரி. அந்தவகையில் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகள் தான் எனக்கு எதிரி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை என்பது தவிர்க்க முடியாதது. தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால், விசாரணையில் தெளிவுப்படுத்தினால் சரியாகிவிடும்.

கூட்டணிக்கு வரச்சொல்லி எனக்கு வராத அழுத்தமா வேறு யாருக்காவது வரப்போகிறது? எத்தனை அழுத்தம் வந்தாலும் நாம் தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு நிலத்தில் வாழும் தேசிய இனம் தன் உரிமைக்காக போராடும் போது, அதே நிலத்தில் வாழும் பிற மொழி இனத்தினரை பகைவர்களாக மாற்றி கொண்டு வெல்ல முடியாது.

நாம் தமிழர் கட்சியின் அரசியல் எல்லாருக்குமானது. ஆனால் தலைமை அதிகாரம், தமிழருக்கு மட்டும் தான். விஜய் கூட்டணியை விரும்புகிறார். ஆட்சியில் பங்கு தருகிறேன் என்கிறார்.

இதனால் அவருடன் வரும் கட்சிகளை அவர் சேர்த்து கொள்கிறார்.நான் கூட்டணியை விரும்பவில்லை.

கூட்டணிக்கு போகவும் விருப்பமில்லை. விஜய்யுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூட்டணி வைக்க போகிறார்கள் என்றால் அது அவர்களுடைய விருப்பம். இதில் யாரும் கருத்து சொல்ல முடியாது.

விஜய் வைக்கும் கருத்தியல் கோட்பாட்டில் சில கேள்விகளை முன்வைத்ததால் நாங்கள் எதிரி என்றால் எப்படி? நான் விஜய்யை எதிர்ப்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. அவருடன் எனக்கு போட்டியில்லை.

என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எனக்கு எதிரி இல்லை. நான் எதிர்ப்பவர்களே எனக்கு எதிரி.

அந்தவகையில் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகள் தான் எனக்கு எதிரி. அதிகார பகிர்வு தொடர்பாக பேசிய காங்கிரஸ்ஸ் எம்பி மாணிக்கம் தாகூரை ஜெயிக்க வைத்ததே திமுக தான்.

திமுகவுடன் இருப்பது கஷ்டமாக இருந்தால், காங்கிரஸ் கட்சி தனியாக சென்று, நிற்க வேண்டியது தானே? அதைவிடுத்து இவ்வாறு பேசுவது கூடுதல் தொகுதி கேட்க பேரம் செய்வதற்கான வாய்ப்பை தவிர ஒன்றுமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *