கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜய்யின் பிரச்சார வாகனம்: மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் ஆய்வு!!

கரூர்:
கரூர் சுற்றுலா மாளிகை சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட விஜயின் பிரச்சார வாகனத்தை மத்திய உள்துறை அமைச்சக விவகாரத்துறை அதிகாரி தலைமையில் மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போனில் அழைத்தும், நேரில் சென்றும் பல்வேறு தரப்பினரிடையே விசாரணை நடைபெற்று வருகிறது. நவ. 24, 25-ம் தேதிகளில் தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றது.

ஏடிஜிபிக்கள் சோனல் வி.மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச. 2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெற்றனர்.

கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல், திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல்குமார், எஸ்பி கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜி.மணிவண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு, சம்பவ இடத்தை பார்வையிட்டு, தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி சென்றது.

கடந்த டிச. 29-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆட்சியர் மீ.தங்கவேல், எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஜன. 12-ம் தேதி) தவெக தலைவர் விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரம் நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சக விவகாரத்துறை (மினிஸ்ட்ரி ஆப் ஹோம் அபையர்ஸ்) அதிகாரி தலைமையில் மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். சிபிஐ அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் கரூர் சுற்றுலா மாளிகை சிபிஐ அலுவலகத்திற்கு இன்று (ஜன. 10) காலை 9 மணிக்கு கொண்டு வரப்பட்டது. பேருந்து ஓட்டுநர், தவெக வழக்கறிஞர் அரசு மற்றும் தவெக நிர்வாகிகள் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்திருந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சக விவகாரத்துறை அதிகாரி தலைமையில் மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் விஜயின் பிரச்சார வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பேருந்தினுள் ஏறி ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பேருந்தை முன், பின் இயக்கக்கூறி ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் 2-வது நாளாக சாலை அளவீடு செய்யம் பணிகளை மேற்கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *