திருச்சி
விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அந்த காலத்தில் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள்.

அதுபோலத்தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள்.
ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்க வந்துள்ளேன். 1974-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல் மாநாட்டை நடத்தியது திருச்சியில்தான். 1956-ம் ஆண்டு அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய விஜய், “டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு எடுப்பேன் என்று சொன்னீர்களே செய்தீர்களா?
505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ள திமுக, அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. இதுபோல நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை” என்று கூறினார்.
மேலும், “பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சொல்லிக் காட்டி அசிங்கப்படுத்துவதா? மகளிர் உதவித் தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. மகளிர் விடியல் பயணம் என்று அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் பெண்களை அவமானப்படுத்துகின்றனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் வாக்கு? கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக எவ்வித சமரசமும் இல்லாமல் வழங்கும்.
நடைமுறைக்கு எது சாத்தியமோ அதை மட்டுமே நாங்கள் சொல்லுவோம். அடிப்படை வசதிகள் செய்வதில், பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கில் எந்தவித சமரசமும் இருக்காது.” என்று கூறினார்.