கடந்த 2017-ல் இருந்தது போல அண்ணன் – தம்பியாக ஒன்றிணைந்து விட்டோம்; திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்!! இபிஎஸ் – டிடிவி தினகரன் உற்சாகம்!!

சென்னை:
கடந்த 2017-ல் இருந்தது போல அண்ணன் – தம்பியாக ஒன்றிணைந்து விட்டோம், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் தெரிவித்தனர்.

நேற்று மோடி பிரச்சாரத்துக்குப் பிறகு என்டிஏ கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பழனிசாமி, “கடந்த 2 மாதத்துக்கு முன்பு, அதிமுக கூட்டணி அமைப்பதற்காக தடுமாறி கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

இன்றைக்கு பாஜக-வுடன், பாமக, அமமுக என பல கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கின்றன.

மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன. நானும் சரி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும் சரி தெளிவாக இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், நாங்கள் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எப்போது கூட்டணிக்குள் இணைந்தோமோ அப்போதே கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டோம்.

வைகோவை போல் எந்த தலைவரும் திமுக-வை விமர்சித்திருக்க முடியாது. இன்று அவர் திமுக கூட்டணியில் இருக்கிறார். காங்கிரஸ் கொண்டுவந்த எமெர்ஜென்சி, மிசா சட்டத்தால் சிறைக்குச் சென்று துன்பப்பட்டதாக திமுக கூறியது.

இப்படிப்பட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது எங்களுக்குள் எந்த மனவருத்தமும் கிடையாது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை தொடர்வது தான் எங்களது நிலைப்பாடு. அதற்கேற்ப ஒன்றாக இருந்து செயல்படுவோம்” என்றார்.

டிடிவி.தினகரன் பேசுகையில், “எனக்கும் பழனிசாமிக்கும் இடையே இருப்பது ஒரு கூட்டுக் குடும்பப் பிரச்சினை. எங்களைச் சேர்க்க மத்திய அமைச்சர் அமித் ஷா 2021-ம் ஆண்டே முயற்சி செய்தார்.

அப்போது முடியாமல் போய்விட்டது. 2026-ல் பிரதமர் மோடி, என்னையும் பழனிசாமியையும் ஒன்றாக இருந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு உதவி செய்ய வேண்டும், கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இது நடந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. அப்போதே நான் ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு பழனிசாமியும் ஒப்புதல் அளித்தபின் கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இதில் அச்சுறுத்தலோ, அழுத்தமோ யாருக்கும் இல்லை.

2017 ஏப்ரல் வரை எப்படி இருவரும் அண்ணன் – தம்பியாக இருந்தோமோ, அதுபோல் ஒன்றிணைந்து விட்டோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *