சென்னை:
திமுக கூட்டணியில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சென்னை கேகே நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வரலாறு படைத்த தலைவர்கள். இந்த பூமி உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. அடுத்த மாதம் தேர்தல் அறிவித்து விடுவார்கள்.
ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும். திமுக ஆட்சிக்கு இன்னும் 2 மாதங்கள், 2 அமாவாசைகள் தான் இருக்கிறது. இந்நிலையில் புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள், அடிக்கல் நாட்டுகிறார்கள். ஒரு மாதத்தில் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா?
அதிமுக பலமான கூட்டணி: காங்கிரஸ் – திமுக கூட்டணியில் குழப்பமும், விரிசலும் வந்தாகிவிட்டது. உதயநிதி, காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார். ஆனால் கை நழுவும் நிலையில் உள்ளது.
திமுக கூட்டணியில்தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வந்துள்ளன. இன்னும் சில கட்சிகள் வர உள்ளன.
திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் நமது கூட்டணி 210 இடங்களில் வெல்லும். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
4 அதிகார மையங்கள்: திமுக அரசில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என 4 முதல்வர்கள் தமிழகத்தை ஆட்டிப் படைக்கின்றனர். தமிழகத்தை 4 அதிகார மையங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன.
திமுகவினர் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி வரை கொள்ளை அடித்துள்ளனர். தேர்தலின்போது பல திமுக அமைச்சர்கள் பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்.
தமிழகத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 699 சிறுமிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதைவிட மோசமான ஆட்சி இதுவரை நடந்ததில்லை. இவ்வாறு அவர் பேசினார்.