சென்னை:
முன்னாள் மாணவர்கள், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று, அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னை, அசோக்நகர், தகைசால் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.90 கோடியில் 40 கூடுதல் வகுப்பறைகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.அ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அரசு பள்ளி தூதுவர் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். மேலும், முன்னாள் மாணவர் வழிகாட்டுதல் திட்டத்தை தொடங்கி வைத்து, விழுதுகள் செயலியையும் வெளியிட்டார்.
இந்நிகழ்வில், மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “முன்னாள் மாணவர்களை இந்த திட்டம் மூலம் ஒருங்கிணைத்து இருக்கிறோம். மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன் போன்ற ஆளுமைகள் தமிழகம் முழுவதும் அதிகம் உருவாக வேண்டும்.
உயர்ந்த நிலையில் இருக்கும் ஆளுமைகள் பள்ளி தூதுவர்களாக அரசுப் பள்ளிகளில் அடியெடுத்து வைத்தால், நிச்சயம் நிறைய பேர் உருவாவார்கள். முன்னாள் மாணவர்கள் இந்த துறைக்கு நல்ல கருத்துகளை வழங்குங்கள். நாங்கள் அதை செயல்படுத்துகிறோம்”என்றார்.
கலைத் திருவிழா: பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைத் திருவிழா மற்றும் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் அவர்கள் வழங்கினர். முன்னதாக, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. உங்கள் திறன்களை அறிந்து மேம்படுத்தவே பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன” என்றார்.