சென்னை:
“மாநிலங்களை அழிக்கத் துடிக்கும் பாஜக, எல்லா மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது. தமிழகத்தைக் கைப்பற்ற எடுக்கும் பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
என்டிடிவி நிகழ்வில் பங்கேற்ற அவர் பேசியது: “வரவிருக்கும் தேர்தல் தமிழகத்துக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்.
இது திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான நடக்கும் போராக இருக்கப்போகிறது. திராவிட கருத்தியல் என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டால், அது இந்தியாவை இன்னும் வலிமையாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
எங்களிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, தனித்துவமான கொள்கைகள் உள்ளன என நம்புகிறேன்’ என்ற அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவை வெறும் வார்த்தைகளோ, முழக்கமோ அல்ல. இது சுயமரியாதைக்கான பிரகடனம், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சேர்ந்த மக்களின் விருப்பத்தின் விளைவாக பிறந்த ஒரு கருத்தியல், முழு தேசத்தையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்று உங்களில் பலர் என்னிடம் கேட்கலாம். இந்த கேள்வி என்னை ஆச்சரியபடுத்தவில்லை.
திராவிட கருத்தியல் என்பது, பிரிவினையை தூண்டுவதல்ல. உண்மையில், அது பிரிவினைக்கு எதிரானது.
திராவிடம் அனைவரையும் உள்ளடக்கியது. இது ஆதிக்கத்தால் விளையும் ஒருங்கிணைப்பை அல்ல, சமத்துவத்தின் மூலமான ஒற்றுமையையே வலியுறுத்துகிறது என்பதை தெளிவாகப் பதிவு செய்ய விருப்பப்படுகிறேன்.
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது, சில சுயநலவாதிகள் அது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்று சித்தரித்தனர். ஆனால், அவர் சமூக நீதி காக்கும் திராவிட இயக்கத்துக்குத் தலைமை தாங்கி அதை தீவிரமாக முன்னெடுத்தார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசு அலுவலகங்களில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடமே இல்லை.
பெரும்பாலான வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உயர்சாதியினராகவே இருந்தனர். இந்தத் தடைகளைத் தகர்த்து, அவற்றை மக்கள்மயப்படுத்தியது திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் சமூக நீதிக்காக குரல் எழுப்பியது. பெரியாரும், அம்பேத்கரும் சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் ஒரே மாதிரியான பிடிப்பை கொண்டிருந்தனர்.
அவர்கள் காட்டிய கொள்கை வழியில், எங்கள் தலைவர் கருணாநிதி மண்டல் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்துவதில் உறுதியாக நின்றார்.
பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், முன்னாள் பிரதமர் வி.பி. சிங் உடன் இணைந்து மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அவர் அமல்படுத்தினார்.
அதுமட்டுமின்றி 2007-இல், தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தியது. இதன் மூலம் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பயனடைந்தனர்.
இந்தியாவின் பொருளாதார தலைநகராக மும்பையும், நிர்வாகத் தலைநகராக டெல்லியும் இருப்பது போல, இந்தியாவின் சமூக நீதித் தலைநகராக தமிழகம் திகழ்கிறது.
நாங்கள் எப்போது மாநில உரிமைகளைக் கோரினாலும், டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் அதைத் தேச விரோதமனதாக சித்தரிக்கிறார்கள். ‘மாநிலத்தின் கல்வி உரிமையில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது’ என்று நாம் சொன்னால், பாஜக கோபப்படுகிறது. ‘சுகாதாரத் துறையில் ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள்’ என்று சொன்னால் பாஜக எரிச்சலடைகிறது.
மாநில அரசுகளின் அல்லது மக்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல், எதையும் திணிக்கலாம் என்று ஒன்றிய அமைச்சர்களும், ஆளுநர்களும் நினைக்கிறார்கள்.
ஆனால், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் அரசியல் லாபத்துக்காகச் சொல்லப்பட்ட ஒன்றல்ல. உண்மையில், மாநில சுயாட்சியும் மொழி உரிமையும்தான் திமுகவின் உயிர்.
1971-இல் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகளை மறுவரையறை செய்ய குழு ஒன்றை அமைத்தார் கருணாநிதி. 2025-இல், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.
வெளியுறவு, பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் நாணயம் ஆகியவற்றைத் தவிர, மற்றவை அனைத்தும் மாநிலப் பட்டியலிலேயே இருக்க வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்தி வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான தேவைகளும் சவால்களும் உண்டு. உதாரணமாக, தமிழ்நாடு அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட, தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம்.
ஆனால், தேசிய அளவில் திட்டங்களை வகுக்கும்போது மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. இதனால், ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வுத் திட்டங்கள் பலன்களை விட மாநிலங்களுக்குப் பாரத்தையேத் தருகின்றன.
புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டின் மீது மறைமுகமாகத் திணிக்க முயல்கிறார்கள். 1968-இல் அண்ணா வழங்கிச் சென்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.
1960களில், அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, திமுக இந்தி திணிப்புக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கியது.
நமது திமுக தொண்டர்கள், குறிப்பாக மாணவர்கள், அதை மக்கள் இயக்கமாக மாற்றி, மொழி வெறியை வெற்றிகரமாக தடுத்தனர். நமது சமூக நீதி மற்றும் மொழிக் கொள்கைகளின் விளைவுகள் இன்று தெளிவாகத் தெரிகின்றன.
திராவிட மாடல் மீதும், இருமொழி கொள்கை மீதும், கேள்வி எழுப்புபவர்களுக்கு நமது சாதனைகளே பதிலாக அமைகின்றன. இந்தித் திணிப்பு தமிழ் மொழிக்கு மட்டும் அச்சுறுத்தல் அல்ல.
அது ஏற்கெனவே வட மாநிலங்களில் பல மொழிகளை உண்டு செரித்துவிட்டது. அதனால்தான், நம் முதல்வர் இந்தித் திணிப்புக்கு எதிராக உயர்த்திய குரல், நாடு முழுவதும் எதிரொலித்தது.
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 3,500 கோடி ரூபாய் கல்வி நிதியை, இன்னும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. 10,000 கோடி ரூபாய் தருவதாக இருந்தாலும், தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று முதல்வர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
கல்வி நிதி மட்டுமல்ல, இயற்கைச் சீற்றங்களின் போது தரவேண்டிய நிவாரண நிதியைக் கூட ஒன்றிய அரசு முறையாக விடுவிப்பதில்லை.
கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாடு கோரிய நிவாரண நிதியில் வெறும் 17 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், ஓசூர் விமான நிலையத் திட்டம் ஆகியவற்றுக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகின்றனர்.
இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும், நமது முதல்வர் பல்வேறு சிறப்புவாய்ந்த மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். விடியல் பயணத் திட்டம் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை வழங்கியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 22 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் கல்லூரி பயிலும் 8 லட்சம் மாணவ, மாணவிகள் மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றார்கள். நான் முதல்வன் திட்டம் 30 லட்சம் மாணவர்களைத் தொழில் துறைக்குத் தயார்படுத்துகிறது.
இவை எல்லாவற்றையும் விட மேலாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை வழங்கி வருகின்றது.
இரண்டு தினங்களுக்கு முன்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் இளம் பெண்களுக்கு ஹெச்.பி.வி தடுப்பூசிபோடும் முன்னோடியான திட்டமும் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் நடவடிக்கையாகும்.
ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்து, இன்று விசாரணை அமைப்புகளையும் ஆளுநர்களையும் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கின்றது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில்லை.
பாஜக விரும்புவது ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை, ஒற்றுமையான இந்தியாவை அல்ல. அவர்களின் நோக்கமெல்லாம் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல் என்பதுதான்.
மாநிலங்களை பாஜக அழிக்கத் துடிக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது. அதன் மூலம் டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் மாநிலங்களை இயக்க நினைக்கிறார்கள். அவர்கள் மாநிலங்களை நகராட்சிகளாக மாற்றப் பார்க்கிறார்கள்.
திராவிடம் இந்திய அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டாட்சிக் கொள்கைகளை குழைக்க முயலும் எந்த முயற்சியையும் தொடர்ந்து எதிர்க்கிறது. இதுவே திமுகவை பாஜக அச்சுறுத்தலாகக் கருதுவதற்கான முக்கிய காரணம். எனவே, அவர்கள் எங்களை அடக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.
சென்னைக்கு அண்மையில் வந்த ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டிற்கு டபுள் எஞ்சின் தேவை’ என்று கூறினார்.
நமது முதல்வர் அதற்கு ‘டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது’ என்று பதிலடி கொடுத்தார். இதற்கெல்லாம் எதிராக திராவிட மாடலின் ஒற்றை எஞ்சின் மிகவும் சக்திவாய்ந்தது, பயனுள்ளது மற்றும் மக்களுக்கு உகந்ததாகும்.
திராவிட மாடல் அரசின் சில முக்கிய சாதனைகளை இங்கு பட்டியலிட விரும்புகிறேன். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு 11.19 சதவீதம் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை, நாட்டிலேயே அதிமான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 52% ஆக உள்ளது. இது அமெரிக்காவை விட அதிகம், ஸ்காண்டிநேவிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 17.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் 3.58 லட்சம் ரூபாயாக உள்ளது, இது தேசிய சராசரியை விட 1.74 மடங்கு அதிகமாகும்.
ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 கல்லூரிகள் நாட்டின் முதல் 100 கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளன. இந்தியாவின் 11.2 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் வெறும் 1.43 சதவிகிதம் மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.
இன்று தமிழ்நாடு மாநிலம் இந்தியாவின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த வேகத்தில் பயணிக்கும் நாம் 2030-ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
வரும் ஆண்டுகளில், திராவிட மாடல் தமிழ்நாட்டை, புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும், வலுவான இந்தியாவைக் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றும்.
இந்த நேரத்தில், தமிழ்நாட்டைக் கைப்பற்ற எடுக்கும் பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை. நமது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பாசிச சக்திகளை நிச்சயம் தோற்கடித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்.
எங்களை பொறுத்தவரை சமதர்மமே அனைத்துக்கும் மேலானது. சமதர்மம் என்பது அனைவரும் சமமான சமூகம், நீதியை அடிப்படையாக கொண்டு வழிநடத்தப்படும் நிர்வாகம். இங்கு சாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு இடமில்லை.
சமூக நீதி, மாநில உரிமைகள், சுயமரியாதை ஆகியவற்றை வேர்களாக கொண்ட திராவிடத்தின் அவசியத்தை நாடு உணரத் தொடங்கியுள்ளது.
அதன்படி இந்தியா இதற்கு முன்பை விட வலுவாக எழும். வலுவான மாநிலங்கள், சுயமரியாதை உணர்வுள்ள மக்கள், அனைவருக்கும் சம வாய்ப்புகள் – இதுவே திராவிட மாடல். இதுவே வலுவான இந்தியாவுக்கான பாதை” என்றார் உதயநிதி ஸ்டாலின்.