ரூ.28 கோடி செலவில் 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காரைக்குடி மினி டைடல் பூங்காவை இன்று திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

காரைக்குடி:
ரூ.28 கோடி செலவில் 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காரைக்குடி மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.01.2026) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 28 கோடி ரூபாய் செலவில் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காரைக்குடி மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.

2000-ஆம் ஆண்டில் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை, தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.

‘அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி’ என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதிய டைடல் பூங்காக்கள் நிறுவ முதல்வரால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவற்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதல்வரால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இப்பூங்காவின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 19.05.2023 அன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும், திருப்பூர் மினி டைடல் பூங்கா 11.08.2025 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா 05.11.2025 அன்றும் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 1.08.2025 அன்றும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 5.11.2025 அன்றும் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவை மட்டுமின்றி விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்படவுள்ளது.

காரைக்குடி மினி டைடல் பூங்கா:

இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ள காரைக்குடி மினி டைடல் பூங்கா 28 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 50,000 சதுர அடி கட்டுமான பரப்பளவில், 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின்போது, காரைக்குடி மினி டைடல் பூங்காவினை குத்தகைக்கு எடுத்துள்ள M/s. Namma Office, M/s RCK Techiees & M/s QAds ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டிற்கான ஆணையினை முதல்வர் வழங்கினார்.

இந்த மினி டைடல் பூங்கா மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், அப்பகுதியின் சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *