திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் ரெடியா; திராவிட மாடல் 2.0வுக்கு ரெடியா?.. திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்றால் இன்றைய ஒரு நாள் போதாது – தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…

நாகர்கோவில்,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டம் கர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான மகேஷ், நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டமேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-


அன்பான வரவேற்பால் என்னை திக்குமுக்காட வைத்தது குமரி மக்கள்தான். இப்போது திரும்பவும் வந்துள்ளேன். சூரிய உதயத்தை பார்க்க மக்கள் வரும் மாவட்டம்தான் குமரி. அப்படிப்பட்ட குமரியில் உதயசூரியனுக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் ரெடியா; திராவிட மாடல் 2.0வுக்கு ரெடியா?.. திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்றால் இன்றைய ஒரு நாள் போதாது.

மீன் பிடி தடைக்கால மாத நிவாரணத் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். மீன்கள் குறைவான காலகட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 70 ஆக அதிகரிக்கப்படும்.

மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்விடைந்துள்ளது. சிறிய நாடுகள் கூட நம்மை அச்சுறுத்தும் வகையில் நமது வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது.

மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என விமர்சித்த பிரதமர் மோடி, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்காத பிரதமர் மோடி, தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை ஏற்பாரா? மாட்டாரா?

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள அவர் டெல்லிக்கு காவடி தூக்குகிறார். அதிமுக பாஜகவின் கொத்தடிமை கூட்டமாக மாறிப் போயுள்ளது. தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சுயநலத்திற்காக இப்படி ஒரு நிலைமையில் அதிமுகவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

மதவெறிப் பார்வையோடு மனிதநேய செயல்பாடு மீது தொடுக்கும் தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது. இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்வாரா?..அதை ஆதரிக்கிறாரா?

இஸ்லாமிய மக்களைப் போலவே கிறிஸ்தவ மக்களுக்கும் துரோகம் செய்யப்போகிறீர்களா பழனிசாமி?.. தன் சுயநலத்திற்காக, பதவியை காப்பாற்ற இந்த நிலையில் நிறுத்தியதாக அ.தி.மு.க.வினர் புலம்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *