யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, அதிர்ச்சிகரமான திமுக-அதிமுக கூட்டணி அமைந்தால், பொதுமக்களிடையே அதன் விளைவு மிக மோசமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – நடிகர் விஷால் எச்சரிக்கை!!

சென்னை:
யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, அதிர்ச்சிகரமான திமுக-அதிமுக கூட்டணி அமைந்தால், பொதுமக்களிடையே அதன் விளைவு மிக மோசமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “அடுத்த அரசாங்கத்தை அமைக்கப்போவது தமிழக வெற்றிக் கழகம் இல்லை என்றால், அதே சமயம் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, அதிர்ச்சிகரமான திமுக-அதிமுக கூட்டணி அமைந்தால், ஒரு குடிமகனாகவும் வாக்காளராகவும் பொதுமக்களிடையே அதன் விளைவு மிக மோசமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இது நிச்சயமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “2017 மற்றும் 2018-ல் கோவா, மணிப்பூர், மேகாலயா, மிக முக்கியமாக கர்நாடகாவில் நடந்த அதே சூழல்தான் இதுவும்.

அங்கு அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதே முறையில் தமிழகத்திலும் விஜய் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் ஏன் வாய்ப்பு வழங்க தயங்குகிறார்? மக்களின் தீர்ப்புக்கு வழங்கப்படும் மரியாதை இதுதானா? 233 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்க வேண்டியுள்ளது, நமக்குத் தேவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமே தவிர, ஆளுநர் ஆட்சி அல்ல.

தவெக பெரும்பான்மைக்கு மிக நெருக்கமான இடங்களைப் பெற்று இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவை பெற்ற பிறகு ஆளுநர் ஆட்சி ஏன்? இந்த அடிப்படை உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, மிக வலிமையான சக்தியான தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அன்பிற்குரிய விஜய், நீங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்பீர்கள். ஒரு வாக்காளராக நான் அதை முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார்.

இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லே கரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *