புதுச்சேரி:
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி, மேரி ஹாலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, “நாளை பள்ளிகள் தொடங்குகின்றன. வெயில் அதிகரிப்பு காரணமாக, விடுமுறை நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும்.” என்றார்.
தொடர்ந்து, அமைச்சரவை நாளை விரிவாக்கம் இருப்பதாக பேச்சு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “அமைச்சரவை விரிவாக்கம் இருக்கலாம்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திக்கிறீர்கள் என்ற கேள்விக்கு “ஆளுநரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்,” என்றார்
மேலும், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாஜக அழுத்தம் தந்துள்ளதா என்ற கேள்விக்கு, “பாஜக அழுத்தம் எதுவும் எப்போதும் கொடுத்தது கிடையாது” என்று முதல்வர் ரங்கசாமி கூறிச் சென்றார்.