“மாற்றம்” வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு தினந்தினம் இப்படி உயிர்பயத்தைக் காட்டிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது!! நயினார் நாகேந்திரன் சாடல்…

சென்னை:
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர்!

கடந்த வாரம் தமிழகத்தையே உலுக்கிய நெல்லை இரட்டைக் கொலையின் பதற்றம் தணிவதற்குள்ளேயே, கோவை சிங்காநல்லூர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தப்பட்டுள்ள சம்பவமும், விருதுநகர் மாவட்டம் அருகே, திமுக கொடி கட்டிய காரை ஏற்றி ஒரு சிறுமியைக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவமும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

பட்டப்பகலில் பொதுவெளியில் யார், யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம், தாக்கலாம், கொலை செய்யலாம் என்னுமளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதும், அதை ஜோசப் விஜய் அரசு வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

அதிலும் குறிப்பாக, தவெக ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கே பொது வெளியில் பாதுகாப்பளிக்க முடியாமல் முதல்வர் விஜய் அவர்கள் திணறுவது, அவரின் நிர்வாகத் தோல்வியைத் தான் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

“மாற்றம்” வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு தினந்தினம் இப்படி உயிர்பயத்தைக் காட்டிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது.

எனவே, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையும் வேளையிலாவது, முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும்!

தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *