கர்நாடகா;
கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அவற்றின் விலை லிட்டருக்கு தலா ரூ.3 அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஜக சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது.
சிமோகாவில் உள்ள சீனப்பா செட்டி வட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், எம்.பி.பானு பிரகாஷ் (69) பங்கேற்றார். இதில் மாநில அரசை கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், போராட்டத்துக்குப் பின்னர் ராம் பஜனை நடத்தினார். பின்னர், காரில் ஏறியபோது பானுபிரகாஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த பானு பிரகாஷ் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தீவிர தொண்டராக இருந்தார். 1999ம் ஆண்டில் கஜனூர் மாவட்ட பஞ்சாயத்து தொகுதியில் இருந்து அரசியலில் நுழைந்தார். அவர் 2013 முதல் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பின்னர் பாஜகவின் மாநில பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.