அமெரிக்கா ;
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணியின் வீரர்கள், நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். சார்லல் அமினி 17 ரன்களும், நார்மன் வனுவா 14 ரன்களும், சிசி பவ் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டும் எடுத்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் லொக்கி ஃபெர்குசன் வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர் ,ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார்.
மேலும் மூன்று விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறந்த எக்கானிமியான 0.00 என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இதன் பின்னர் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
பின்னர் வந்த கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிச்சல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இதனால் 12.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, அந்த அணி 79 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.