திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மரணம் !! குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தினகரன்

திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் திரு. பாலாஜி அவர்களின் மகள் செல்வி. தாரணி அவர்கள், திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

செல்வி. தாரணி அவர்களை இழந்துவாடும் திரு.பாலாஜி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த செல்வி. தாரணி அவர்களை உடனடியாக பார்க்கச் சென்ற போது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து செல்வி.தாரணி அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை திரு.பாலாஜி அவர்கள் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, செல்வி.தாரணி அவர்களின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *