32,500 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி உறுதி….

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை. நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *