முருகப்பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான், திருவண்ணாமலை!!

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப்பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை ‘தவளகிரி’ என்றும் அழைப்பார்கள்.

உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவபெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணிய தலங்களை தரிசிக்க எண்ணினார்.

அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார்.

வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, ‘தவளகிரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘தவளம்’ என்பதற்கு ‘வெண்மை’ என்று பொருள். வெண்மையான மலையில் வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. வியாச முனிவரால் உருவாக்கப்பட்ட இங்குள்ள தீர்த்தம், ‘வியாச தீர்த்தம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

ஒரு முறை கங்காதேவி இந்த ஆலயத்திற்கு வந்தாள். பலரும் தன் நதியில் நீராடுவதால் ஏற்பட்ட பாவத்தை போக்குவதற்காக கங்காதேவி இவ்வாலயம் வந்து, வியாச தீர்த்தத்தில் நீராடி, இத்தல சிவபெருமானை வழிபட்டு தூய நிலையை அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதுதவிர இந்திரன் மற்றும் தேவர்கள் ஆகியோரும் இங்கு வந்து தவளகிரீஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம், ‘இந்திர தீர்த்தம்’ என்ற பெயரில் இங்கு உள்ளது.

தாரகாசுரன் என்ற அசுரனை அழித்த பிறகு, முருகப்பெருமான் பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தார். அதன்படி அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை வந்து ஈசனை வழிபட்டார்.

பின்னர் அவரை ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசனை நினைத்து தியானித்தார். அப்போது அங்கே தோன்றிய சிவபெருமான், “குமரா! முன்பொரு சமயம் திருமாலும், பிரம்மனும் காணுமாறு ஆதியந்தமில்லா பெருஞ்ஜோதியாக இங்கே நான் நின்றேன்.

பின்பு கார்த்திகை பவுர்ணமி நாளில் இத்தலத்து அர்த்தநாரி ஆனோம். இதே தலத்தில் மீண்டும் ஜோதி வடிவை காட்டுவதற்கு பதிலாக, நீ தவளகிரியில் என்னுடைய ஜோதி வடிவத்தை காணலாம்” என்று கூறி மறைந்தார்.

அதன்படி தவளகிரி சென்ற முருகப்பெருமான், அங்குள்ள தவளகிரீஸ்வரரை வழிபட்டு, தன்னுடைய கூரிய வேலால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, ஈசனுக்கு அபிஷேகம் செய்தார். அவ்வேளையில் குன்றின் மீது சிவபெருமான் ஜோதிரூபமாக தோன்றி காட்சி அளித்ததுடன், அங்கேயே சிவலிங்க ரூபமாக மாறிப்போனார்.

முருகப்பெருமானுக்கு திருக்காட்சி நல்கிய அந்த சிவபெருமான், இன்றும் இவ்வாலயத்தில் ‘அருணாசலேஸ்வரர்’ என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முருகப்பெருமானால் உண்டான தீர்த்தம் ‘குமார தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. பல்வேறு ரிஷிகளும், சித்தர்களும் இத்தல தவளகிரீஸ்வரரை வழிபட்டிருக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. அவை பல்லவர் காலத்து கல்வெட்டுகளாகும். இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்திற்கு எழுந்தருளுவார்.

தொடர்ந்து மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும், இதர மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம், சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்துக்குத் தெரியும் என்கிறார்கள். 3 நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசிப்பதன் மூலம் ஈசன் மற்றும் அவரது மகன் முருகனின் அருளையும் சேர்த்துப் பெறலாம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், தவளகிரீஸ்வரரை வேண்டி விரதம் இருப்பதுடன், உப்பு, மிளகு எடுத்துச் சென்று மலையில் உள்ள குன்றின் உச்சியில் போட்டுவிட்டு நேர்த்திக்கடன் முடிப்பார்கள். குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெண்குன்றம் கிராமம். இங்கே சுமார் 1,500 அடி உயரத்தில் தவளகிரி மலை உள்ளது. இந்த மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *